History of virat kohli in tamil
"நான் 49 லிருந்து 50-ஐ எட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். ஆனால், நீங்கள் 49 லிருந்து 50-ஐ எட்ட சில போட்டிகளை மட்டும்தான் எடுத்துக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." - கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 49வது சதத்தைப் பதிவு செய்து விராட் கோலி தன்னுடைய சாதனையை சமன் செய்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் இப்படித்தான் வாழ்த்தியிருந்தார்.
சச்சினின் நம்பிக்கையை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் விராட் கோலி. மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததோடு ஓடிஐ போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் சச்சினின் சாதனையையும் முறியடித்திருக்கிறார். ஆம், நியூசிலாந்துக்கு எதிராக கோலி அடித்திருப்பது அவருடைய 50வது ஒருநாள் சதம். ஓடிஐ போட்டிகளில் இதுவரை எவரும் செய்யாத சாதனை இது. இனிமேல் யார் செய்ய நினைத்தாலும் நெஞ்சை முட்டும் மலைப்பைக் கொடுக்கும் சாதனை இது.
2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் தோளில் தட்டிக் கொடுத்து களத்திற்குள் அனுப்பி வைத்திருப்பார் சச்சின். அது தட்டிக் கொடுத்து தேற்றும் தருணமாக மட்டும் இருந்திருக்கவில்லை. அத்தனை நாள்களாக தான் மூச்சிறைக்க கையிலேந்தி ஓடிய பேட்டனை (Baton) சச்சின் கோலிக்கு கை மாற்றிவிட்ட தருணமாகத்தான் பார்க்கப்பட்டது. சச்சின் கொடுத்த உத்வேகத்தோடு இந்தியாவின் நம்பிக்கையாக ஓட்டத்தைத் தொடங்கிய கோலி இன்று அதே சச்சினை விஞ்சி நிற்கிறார். அவரை விட அதிக வேகத்தில் ஓடி அவரை விட அதிக உச்சத்தில் ஏறி நிற்கிறார்.
அதுவும் இந்தியாவிற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் ஒரு ஐ.சி.சி தொடரில் அத்தனை சாதனைகளையும் நிகழ்த்தி அணிக்குத் தேவையானதையும் 200% சரியாகச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
விராட் கோலி என்னதான் சிறப்பாக ஆடினாலும் ஐ.சி.சி தொடர்களின் நாக் அவுட்டில் பொறுப்பை உணராமல் சொதப்பி விடுகிறார் எனும் குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.
2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் 1 ரன்னில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மோசமாக வீழ்ந்திருந்தார். 2019 உலகக்கோப்பையிலும் அதே கதைதான்.
முக்கியமான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 1 ரன்னில் அவுட் ஆகியிருந்தார்.
ஆனால், இந்த முறை கதையே வேறு. இந்த உலகக்கோப்பைதான் கோலியின் ஆகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்ட உலகக்கோப்பை. லீக் போட்டிகளில் ஆடிய 9 போட்டிகளில் 5 அரைசதங்களையும் 2 சதங்களையும் அடித்திருந்தார். அதில், அவரது பிறந்தநாளில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து சச்சின் சத சாதனையை முறியடித்த சம்பவமும் நடந்திருந்தது. ஆக, இந்த முறை கோலியின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.
நாக் அவுட்களில் இதுவரை அவரின் பெயரில் எழுதப்பட்டிருந்த அத்தனை அவலங்களையும் துடைத்தெறிந்து புதிய சரித்திரத்தை எழுதிக் கொள்ளும் வாய்ப்பு கோலியின் முன் இருந்தது. அதுவும் தன்னுடைய ஹீரோ தோளில் தட்டி வழியனுப்பி வைத்த அதே வான்கடே மைதானம்தான் அந்தப் புதிய சரித்திரத்திற்கான களமாகவும் அமைந்தது.
ரோஹித் முதல் 10 ஓவர்களில் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டு செல்ல, அதற்கு பிந்தைய ஓவர்களில் பொறுப்பு மொத்தத்தையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டார் கோலி. ஆனால், இந்தப் போட்டியிலும் கோலிக்குச் சில தடுமாற்றங்கள் இருந்தன. இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே சௌதியின் பந்து ஒன்றை பேடில் வாங்க அதற்கு வில்லியம்சன் அப்பீல் செய்து ரிவியூவ்க்கும் சென்றிருப்பார். பந்து பேடில் படுவதற்கு முன்பாக பேட்டில் உரசியதால் மட்டும் கோலி தப்பித்தார். கோலியைத் தடுமாற செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெஸ்ட் மேட்ச் பாணியில் டைட்டாக ஃபீல்ட் செட் செய்திருந்தார் வில்லியம்சன். கோலி அசரவே இல்லை. எந்த இடரும் இன்றி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை ஆடினார். நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து ஆடினார்.
ரன்ரேட்டைக் கீழே விழ செய்யாமல் இருக்க சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். ஃபீல்டர்களுக்கு இடையிலான இடைவெளியை கணித்துத் தரையோடு தரையாக பவுண்டரிகளைச் சிதறடித்தார். வந்தவுடனையே திணறிய சௌதிக்கு எதிராக ஒரு கட்டத்தில் அசாத்தியமாக லெக் சைடில் ஒரு ஷாட் ஆடி பவுண்டரி அடித்திருந்தார்.
"சௌதியின் பந்தில் இப்படி ஒரு ஷாட்டை எப்படி ஒரு வீரரால் ஆட முடியும்..." என கமென்ட்ரியில் இருந்த ஆல் டைம் கிரேட் விவ் ரிச்சர்ட்ஸே வியந்துப் பாராட்டினார்.
கோலி சதத்தை நெருங்கினார். கோலிக்கு சதங்களும் அந்த மைல்கள்களும் புதிதே இல்லை. அவர் எத்தனையோ முறை அதையெல்லாம் செய்திருக்கிறார். இயந்திரத்தனமாக சதங்களைக் குவித்து ரசிகர்களின் இதயங்களை இறக்கைக்கட்டி பறக்க வைத்திருக்கிறார். ஆனால், கோலி இப்போது எட்டவிருந்த சதம் அதற்கு முந்தைய சதங்களையெல்லாம் விட உணர்வுபூர்வமானது. சச்சின் பிறந்து வளர்ந்து வியர்வை சிந்தி பேட்டைச் சுழற்றிய வான்கடேவின் செஞ்சிவப்பு மண்ணில் அதே சச்சினுக்கு முன்பாக அவரின் சாதனையை முறியடிக்கும் தருணத்தை நெருங்கினார். கொஞ்சம் பதற்றப்பட்டார். சாண்ட்னர் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு கேட்ச் கொடுப்பதை போலச் சென்றார். வேக வேகமாக ஒரு ரன்னை எடுக்க முயன்று வாரி விழுந்து சட்டையைப் புழுதிபடிய வைத்தார். ஆனாலும் ஓய்ந்துவிடவில்லை.
ஃபெர்குசன் வீசிய 42வது ஓவரில் ஸ்கொயரில் அடித்து 2 ரன்கள் ஓடி சதத்தை எட்டினார். மூச்சிறைக்க ஓடிவிட்டு 50வது சதம் எனும் சரித்திர மைல்கல்லை எட்டிவிட்டு கோலி செய்த முதல் காரியம் சச்சினுக்குக் கொடுத்த மரியாதைதான். ஹெல்மெட், க்ளவுஸ் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு சச்சினை நோக்கி அப்படியே தலைவணங்கி அந்த மாபெரும் தருணத்தைச் சிறப்பாக நிறைவு செய்தார். சச்சினின் நம்பிக்கை பலித்தது. சரியான நபரின் கையில்தான் இந்திய அணியின் பொறுப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறோம் எனும் பெருமிதம் பொங்க சச்சினும் கோலியின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். கிரிக்கெட்டின் அதி உன்னதமான தருணங்களில் தலையாய இடத்தை இந்தத் தருணம் பிடித்துக் கொண்டது.
117 ரன்களில் கோலி சௌதியின் பந்தில் அவுட் ஆன சமயத்தில் ஒட்டுமொத்த வான்கடே மைதானமுமே கோலிக்கு எழுந்து நின்று கைத்தட்டியது. இப்படி ஒரு தருணத்தை காட்சியாக கொடுத்ததற்கு கோலிக்கு நம்மால் என்ன செய்துவிட முடியும்? காற்றில் துள்ளிக்குதித்து ஆராவாரமிட்டு உற்சாகமாகக் கைத்தட்டி ஒரு சல்யூட் அடித்துவிடலாம்.